Sunday, April 01, 2007

சத்தியமார்க்கம்.காம் - மீலாது வி�

மீலாது விழா – ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்


வியாழன், 29 மார்ச் 2007
ஆண்டுதோறும் ஹிஜ்ரி ஆண்டின் மூன்றாவது மாதமான ரபியுல் அவ்வல் மாதத்தின் 12வது நாள் "ஈதே மீலாத்" என்ற பெயரில் இந்திய முஸ்லிம்களில் அதிகமானோர் மிகவும் முக்கியத்துவம் அளித்து கொண்டாடி வருகின்றனர். இந்நாட்களுக்கு முஸ்லிம் சமூகம் அளிக்கும் முக்கியத்துவத்தினைக் கருத்தில் எடுத்து, மாற்றார்களும் இந்நாட்களை இஸ்லாத்தின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த நாட்கள் என்று இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தும் வருகின்றனர். அதற்கும் ஒருபடி மேலாக இந்திய அரசால் அந்நாள், இஸ்லாமிய அரசு விடுமுறையாகவே அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படும் இந்த நாளின் பின்னணி என்ன?, இது நபிவழியில் அனுமதிக்கப்பட்டதா?, இதனை கடைபிடிப்பது ஸுன்னத்தா? பித்அத்தா? போன்ற பல ஆய்வுக் கட்டுரைகள் அவ்வப்போது வெளிவந்து மக்களை விழிப்புணர்ச்சியூட்டி வருவதும், வாதபிரதி வாதங்களுடன் இது சரிகாணப்படுவதும், மறுக்கப்படுவதும் என்ற நிலை பரவலாக இந்திய அளவில் காண முடிகிறது.

அதே போன்று இந்தியாவிலிருந்து அரபு நாடுகள் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் அங்கும் இதைபற்றிப் பேசுவதும், இங்கிருந்து சென்ற சிலர் அங்கும் மீலாது கொண்டாட்டங்கள் என்ற பெயரில் கூடும் நிலையும் உள்ளது. அரபு நாடுகளில் "மீலாது" என்ற பெயரில் விடுமுறையோ கொண்டாட்டங்களோ, சிறப்பு நிகழ்ச்சிகளோ நடைபெறுவதில்லை. நபி(ஸல்) அவர்கள் பிறந்து வாழ்ந்து வந்த மக்காவிலோ, மதீனாவிலோ கூட இந்நாள் வரை மீலாது என்ற பெயரில் ஏதும் விசேஷ விடுமுறையோ, நிகழ்ச்சிகளோ இல்லையென்பதும் கவனிக்கப்படவேண்டிய உண்மையாகும்.

நபி(ஸல்) அவர்கள் முஸ்லீம்களுக்கு இரண்டு பெருநாட்களை மட்டுமே காட்டிச்சென்றார்கள். அந்நாட்களில் மக்களிடம் ஒட்டியிருந்த முந்தைய எல்லா அனாச்சாரக் கொண்டாட்டங்களையும் ஒழித்து, ரமலான் மாதத்தை ஒட்டி "ஈதுல் பிஃத்ர்" எனும் ஈகை பெருநாள் மற்றும் ஹஜ்ஜை ஒட்டிய "ஈதுல் அழ்ஹா" எனும் தியாகத் திருநாள் ஆகிய இரு நாட்களே நபி(ஸல்) அவர்களால் இஸ்லாமிய பண்டிகை தினங்களாக அடையாளப்படுத்தப்பட்டு இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்ட பண்டிகை தினங்களாகும். இதனை இன்றும் அரபு நாடுகளில் சற்றும் அதிகப்படுத்தாமல் கடைபிடிக்கப்பட்டு வருவதைக் காண முடிகின்றது.

ஈதே மீலாத் என்ற மீலாது எனும் விழா நபி(ஸல்) அவர்களால் காட்டிதரப்படாத, அவர்கள் அங்கீகாரம் பெறாத ஒரு செயல் என்பதே தெளிவு. ஆயினும் ஈதே மீலாத் என்பதன் பொருள், இது பின்பற்றப்படுவதன் பின்னணி, மற்றும் மார்க்கத்தில் அதன் நிலை போன்றவற்றை முஸ்லீம்கள் தெளிவாக அறிந்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.

ஈத் என்றால் பெருநாள்-பண்டிகை என்று பொருள். மீலாத் என்றால் பிறப்பு என்று பொருள். ஆக, ஈதே மீலாத் என்றால், பிறந்த நாள் பண்டிகை(பெருநாள்) என்று பொருள். நபி(ஸல்) அவர்களின் பிறப்பைக் கொண்டாடும் முகமாக அவர்கள் பிறந்ததாகக் கருதப்படும் ரபியுல் அவ்வல் 12-ம் நாளை ஈதே மீலாத் என முஸ்லிம்கள் கொண்டாடி வருகின்றனர்.

இன்று ஆங்கிலக் காலண்டரில் பல்வேறு மாற்றுமத கடவுளர்கள், அரசியல் தலைவர்களின் பிறந்த நாட்களின் பட்டியலோடு இந்நாளும் இடம் பிடித்துள்ளது.

நபி(ஸல்) அவர்களின் மீது அன்பு வைத்துள்ளவர்கள் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுவதில் தவறு ஒன்றும் இல்லையே என்ற ஒரு கருத்தும், நபி(ஸல்) அவர்களை நேசிப்பவர்கள் கண்டிப்பாக மீலாது விழா கொண்டாடியே ஆக வேண்டும் என்ற ஒரு கருத்தும் இன்று பொதுவாக மக்கள் மனதில் பதிந்து காணப்படுகின்றது.

மார்க்கத்தில் இவ்வாறு ஒரு தினத்தை விஷேசமாகக் கொண்டாடுவதற்கு அனுமதி உள்ளதா என்பதை பார்க்கும் முன் இந்நாட்களில் மீலாது கொண்டாட்டம் என்ற பெயரில் நாட்டில் நடக்கும் விஷயங்களை முதலில் பட்டியலிடுவது அவசியமாகும்.

மீலாது கொண்டாட்டத்தில் மௌலிது ஓதுதல், பொது மார்க்க நிகழ்ச்சிகள் நடத்துதல், ஊர்வலம் செல்லுதல் போன்றவை முக்கியமானவைகளாகும். இன்றைய அரசியல் கட்சிகளின் ஊர்வலங்கள் மற்றும் மாற்று மதத்தினரின் ஊர்வலங்களில் நடக்கும் அனாச்சாரங்களை மிஞ்சும் விதத்தில் மீலாது விழா ஊர்வலங்கள் நடத்தப்படுவதும், அதன் மூலமாக சமூகத்தில் குழப்பங்களும், சண்டை சச்சரவுகள் ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்டன.

ஊர்வலங்களின் போது மார்க்கம் அனுமதிக்காத விதத்தில் உச்சதொனியில் தக்பீர் முழங்குதல், மாற்று மதத்தினரை சீண்டும் விதத்தில் மோசமான வார்த்தைப் பிரயோகங்களை உபயோகித்தல் போன்றவை நடைபெறுவதும் பரவலாக வருடந்தோறும் காணமுடிகின்றது.

மார்க்கம் அனுமதித்த விதத்தில் பொது நிகழ்ச்சிகள் மூலம் மாற்று மதத் தலைவர்கள், பிரமுகர்கள் முதல் அனைவருக்கும் இஸ்லாத்தினையும் இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வாழ்க்கையை பற்றியும் எடுத்துரைப்பது தவறு அல்ல. அதே நேரத்தில் இவ்வாறு நபி(ஸல்) அவர்களால் காட்டித் தரப்படாத ஒரு நாளில் அதுவும் அதை பெருநாளாகக் கருதி செயல்படுத்துவது அல்லாஹுக்கோ அல்லாஹ்வின் அருமைத் தூதர் முஸ்லிம்களின் உயிருக்கும் மேலான அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கோ உகந்த செயலாக முடியுமா? என்பது சிந்திக்கப்பட வேண்டியதாகும்.

மீலாது விழா அல்லாஹ்வுக்கு உகந்ததோ, நன்மைகளை விளைவிக்கக் கூடியதோ என்றால் அதை மார்க்கத்தை காட்டித்தர வந்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்திருக்க மாட்டார்களா? அவ்வாறு அவர்கள் காட்டித் தராத ஒரு நன்மையான காரியத்தை இன்று முஸ்லிம்கள் செய்கின்றனர் எனில் அதனை காட்டித் தர நபி(ஸல்) அவர்கள் மறந்து விட்டார்கள் அல்லது மறைத்து விட்டார்கள்(நவூது பில்லாஹ்) என்பது அல்லவா பொருள். அல்லாஹ் பாதுகாப்பானாக.

தனது இறுதிப்பேருரையின் பொழுது அரஃபா மைதானத்தில் வைத்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்: "கவனியுங்கள்! எனது தூதுத்துவப்பணியை உங்களுக்கு அறிவித்து விட்டேனா?" எனக் கேட்டபோது, "ஆம் அல்லாஹ்வின் தூதரே!" என ஒட்டு மொத்த நபித்தோழர்களும் பதில் கூறினர் (புகாரி).

இதனை சாட்சிபடுத்திய நபி(ஸல்) அவர்களின் வார்த்தைகளுக்கு பதிலாக வல்ல ரஹ்மான்,

"இன்றைய தினம் உங்களது மார்க்கத்தை உங்களுக்காகப் பூரணப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான (பொது) மார்க்கமாகவும் பொருந்திக் கொண்டேன்." (5:3)
என்று தனது திருமறையில் வசனத்தை இறக்கி பதிலளித்தான்.

இது தெளிவாக மார்க்கம் முழுமைபடுத்தப்பட்டு விட்டதை அறிவிக்கும் பொழுது, அவற்றில் அல்லாத புதிதாக ஓர் நன்மையைத் தரக்கூடிய செயலாக சேர்க்கும் எந்த ஓர் செயலும் நரகத்திற்கு கொண்டு சேர்க்கும் என்பதை நன்றாக முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேலும் இவை மறுமையில் நஷ்டத்தை விளைவிக்கும் அதே வேளையில் மீலாது விழாக்களின் போது நடத்தப்படும் ஊர்வலங்கள், இம்மையில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் அதிகமாகவும், மற்றவர்கள் மத்தியில் வெறுப்புகளும் இஸ்லாத்தைக் குறித்து தவறான எண்ணங்களும் அதிகமாகவும், சமுதாய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு இவை பாதகமாகவும் இருப்பதை உணர வேண்டும்.

மீலாது விழாக்களை வருடந்தோறும் நடத்தும் சிலர் அதற்கென சில காரணங்களை அடுக்குவதற்கும் தவறுவதில்லை. அதில் மிக முக்கியமானது, "நாங்கள் நபி(ஸல்) அவர்களை புகழ்கின்றோம், மகிமைப்படுத்துகின்றோம்" என்பதாகும்.

ஒருவரை உண்மையில் நேசிப்பது அவரை பின்பற்றுவதன் மூலமும், புகழ்வதும் மகிமைப்படுத்துவதும் அவரின் கொள்கைகளை பரப்புவதன் மூலமுமே சாத்தியமாகும். அல்லாமல் தங்களது வாழ்வில் அவர் கூறிய எந்த விஷயத்தையும் பின்பற்றாமல் அவர் காட்டித் தந்த வழிமுறைகளுக்கு எதிராக செயல்படுவது மகிமைப்படுத்துவதாக ஆகாது. அதை விடுத்து அவரின் புகழுக்கு அது களங்கம் விளைவிக்கவே செய்யும்.

இன்றும் அது தான் நடைமுறையில் காணமுடிகின்றது. மீலாது விழா என்ற பெயரில் சிலர் செய்யும் அனாச்சாரங்கள், தவறுகள் மற்றவர்களை பாதிப்பதாக அமைவதோடு முஸ்லிமல்லாதோர் இதுதான் இஸ்லாம் எனக் கருதி இஸ்லாத்தையும் நபி(ஸல்) அவர்களையும் தூற்றும் நிலைக்கு செல்லும் நிலை இன்று சர்வ சாதாரணமாகும். இதற்கும் இத்தகையோர் பதில் கூற வேண்டும் என்பதை உணர வேண்டும்.

இவ்விடத்தில் மற்றுமோர் விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். மீலாது விழாக்கள் என்ற பெயரில் நடத்தப்படும் இத்தகைய இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்படாத செயல்களின் மூலம் பல பிரதிபலன்களை அடைந்த பலர் அதனை எவ்விதத்திலாவது இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்ட செயல் என்பதை நிறுவ முயல்கின்றனர். அதற்கு சமீபத்திய யூசுஃப் அல்கர்ளாவி அவர்கள் அளித்த ஒரு பதிலை தங்களுக்கு ஏற்றவாறு திரித்து மின்மடலாற்குழுமங்களில் பரிமாறிக்கொள்வதை முக்கிய சான்றாகக் காண முடிகிறது.

மீலாது விழாக்களைக் குறித்து கேட்கப்பட்ட ஓர் கேள்விக்கு, "இன்று முஸ்லிம்களிடையே மறக்கடிக்கப்பட்டு வரும் நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த பல்வேறு சம்பவங்கள், அவர்களின் உறுதி, சஹாபாக்களின் பற்று போன்றவை மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு நினைவுறுத்தப்பட வேண்டும்" என்று 21 ஆம் நூற்றாண்டின் சிறந்த மார்க்க அறிஞராக உலகமார்க்க அறிஞர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்ட டாக்டர். யூசுஃப் அல் கர்ளாவி அவர்களின் பதிலை மௌலிது ஓதவும், மீலாது விழாக்கள் கொண்டாடவும் ஆதாரமாக பரப்பிக் கொண்டுள்ளனர்.

ஆனால் அந்த பதிலிலேயே சுன்னத் வல் ஜமாஅத் மற்றும் ஷியாக்களில் சிலர் இந்நாட்களில் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்படாத பல்வேறு செயல்களை செய்வதாகவும் அவை இஸ்லாத்தில் எவ்விதத்திலும் அங்கீகரிக்கப்படாது என்றும் தெளிவாக கூறியுள்ளதை வசதியாக இருட்டடிப்பு செய்து கொண்டு அப்பதிலை தங்களுக்கு சாதகமாக எடுத்து பரப்பித் திரிகின்றனர். எனவே இவற்றையும் முஸ்லிம்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை குறிப்பிட்டு நபி மொழிகளில் காணக்கிடைக்கும் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தினால் இன்றைய நாட்களில் மீலாத் பெயரில் நடக்கும் அனாச்சாரங்கள் அனைத்தும் கற்பனையானவை என்றும் அந்நாட்களில் என்ன செய்ய வேண்டும் என்பதும் தெளிவாகும்.

நபி(ஸல்) அவர்கள் பிரதி திங்கள் தோறும் நோன்பு நோற்கும் வழக்குமுடையோராக இருந்தார்கள். அது பற்றி நபித்தோழர்கள் ந்பி(ஸல்) அவர்களிடம் வினவிய போது: "அந்நாளில் நான் பிறந்தேன். அதில்தான் என் மீது (அல்குர்ஆன்) இறக்கப்பட்டது" எனப் பதில் கூறினார்கள். (முஸ்லிம்).


மார்க்கத்தில் நபி(ஸல்) அவர்களின் பிறந்தநாளாக உறுதியாக பதிவு செய்யப்பட்ட ஒரே ஆதாரம் திங்கள் கிழமை என்பதாகும். இந்நாளில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்று வல்ல ரஹ்மானுக்கு நன்றி செலுத்திக் காட்டியுள்ளார்கள். உண்மையிலேயே எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மீது உயிரை வைத்திருப்பவர்கள் செய்ய வேண்டியது பிரதி திங்கள் கிழமைகளில் நோன்பு நோற்பதாகும். இதுவே அவர்களை மகிமைப்படுத்தவும் அவர்களின் மீது அன்பு வைத்திருப்பதை வெளிப்படுத்தவும் செய்யும்.

ஏமாற்றுபவன், பொய் பேசுபவன், பிறருக்கு தீங்கிழைப்பவன், அநீதி இழைப்பவன், பிறரை தரக்குரைவாக கருதுபவன், ஏற்றத்தாழ்வு கற்பிப்பவன், மது அருந்துபவன், சூதாடுபவன், விபச்சாரம் செய்பவன், புறம் பேசுபவன் வட்டி வாங்குபவன், அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடக்காதவன், வீண் விரயம் செய்பவன், பித்அத் புரிபவன், பிரிவினையை ஏற்படுத்துபவன், நபிவழியை புறக்கணிப்பவன்... என்று யாரையெல்லாம் அடையாளம் காட்டி அவர்கள் நம்மை சார்ந்தவனல்ல என்றும் இன்னும் அவர்கள் சுவர்க்கத்தில் நுழைய முடியாது என்றும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் எச்சரித்தார்களோ அத்தகைய தீயபழக்க வழக்கங்களை விடுத்து வாழ்வதே உண்மையில் நபி(ஸல்) அவர்களை புகழ்வதும் மகிமைப்படுத்துவதும் ஆகும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) அவர்களை முறையாக பின்பற்றி வாழ முனைவதே அவர்களை கண்ணியப்படுத்துவதும் அதுவே இறை பொருத்தத்திற்கும் வழி வகுக்கக் கூடியது என்பதையும் உள்ளத்தில் பதித்து வாழ அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரிவானாக!

ஆக்கம்: இப்னு முஹம்மத்(ஹனீஃப்)

No comments: